சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரத்தை, தி.மு.க., முன்னெடுத்துள்ளது. இதற்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்றரை மாதம் நடக்க உள்ள பிரசாரத்தில், வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கும் வேலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மூத்த நிர்வாகிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து, இப்பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். அதன் பின்னணி தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஒரு ஓட்டுச்சாவடியில் குறைந்தது, 750 ஓட்டுகள் உள்ளன. அதில், 20 பேர் வரை, தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளனர். அவர்களுடன், 200 - 250 பேர் தி.மு.க., ஆதரவாளர்களாக, அக்கட்சிக்கு ஓட்டளிக்கின்றனர். அதனுடன் பொது வாக்காளர்கள், கூட்டணி கட்சியினரின் ஓட்டுகளும் சேரும் நிலையில், ஓட்டுச்சாவடியில் உள்ள மொத்த ஓட்டுகளில், 300 ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்கலாம். கூட்டணியில் உள்ள கட்சிகளை, தி.மு.க., மேலிடம் முழுதுமாக நம்பவில்லை. எனவே, கூட்டணி கட்சிகளின் ஓட்டு கள் இல்லாமலே, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 40 சதவீதம் ஓட்டுகளை கட்டாயம் வாங்கும் வகையில், தி.மு.க., திட்டமிட்டு உள்ளது. அதற்கு, கட்சி ஆதரவாளர்கள், பொது வாக்காளர்களாக உள்ளவர்களை கண்டறிந்து, கட்சியில் உறுப்பினராக்க வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரத்தின் வாயிலாக, வீடு வீடாக மக்களை சந்தித்து, உறுப்பினராக சேர்க்கும் பணி நடக்கிறது. கட்சி உறுப்பினராகி விட்டால், மாற்றுக்கட்சிக்கு ஓட்டளிக்கும் எண்ணம் இருக்காது. வீடு வீடாக செல்லும்போது, கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து, தி.மு.க.,வினர் விளக்கி கூறுகின்றனர். அரசின் திட்ட பலன் கிடைத்ததா என்பது உட்பட, அவர்களின் முக்கிய கோரிக்கைகளை கேட்டறிகின்றனர். அதில், அரசின் சார்பில் நிறைவேற்ற கூடியதாக இருந்தால், அதற்கு ஏற்பாடு செய்யப்படும். கட்சியினரே செலவும் செய்யும் வகையில் இருந்தால், அதுவும் கிடைக்கும்.இதன் வாயிலாக, கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். சட்டசபை தேர்தல் வரை, உள்ளூர் மக்களுடன் தி.மு.க.,வின் ஓட்டுச்சாவடி முகவர்கள், வார்டு நிர்வாகிகள் தொடர்பில் இருந்து, இதுபோன்ற உதவிகளை செய்வர். அதற்காக அவர்களுக்கு பண்டிகை, தேர்தல் சமயங்களில் பாரபட்சமின்றி, 'கவனிப்பு' செய்யப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் போன்ற பதவிகளில் இருப்பவர்கள், மக்களை சந்திக்காமல் அலட்சியம் செய்வதாக, கட்சி மேலிடத்திற்கு புகார்கள் சென்றபடி உள்ளன. தற்போது, ஒவ்வொரு நிர்வாகியும் மக்களின் வீடுகளுக்கு சென்று, தேவைகளை நிறைவேற்ற உள்ளதால், அந்த குற்றச்சாட்டும் சில நாட்களில் மறைந்து விடும். இதையெல்லாம் கணக்கிட்டே, இந்த களப்பணியில் கட்சியினரை முழுமையாக இறக்கி விட்டுள்ளோம். தேர்தல் வரை இதில் சுணக்கம் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.