உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 108 அடி உயர சதாசிவ மூர்த்தி சிலை: திருக்காஞ்சியில் பணிகள் தீவிரம்

108 அடி உயர சதாசிவ மூர்த்தி சிலை: திருக்காஞ்சியில் பணிகள் தீவிரம்

புதுச்சேரி : திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் பழமை வாய்ந்த, கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந் துள்ளது. இக்கோவிலுக்கு அருகில், சங்கரா பரணி ஆற்றங்கரையில் சிவனுக்கு பிரமாண்டமான சிலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.இதன்படி, 64 அடி உயரத்தில் சிலை அமைப்பதற்காக, கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. பின், பீடத்தையும் சேர்த்து 108 அடி உயரத்தில் சதாசிவ மூர்த்தி சிலை (சிவன்) அமைக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.சங்கராபரணி ஆறுக்கும், திருக்காஞ்சி கோவிலுக்கும் இடையில் 180 அடிக்கு, 180 அடி அளவுள்ள இடத்தில் மூன்று மாடிகள் பீடங்களாக அமைகிறது. மூன்றாவது மாடியின் மீது சிவன் சிலை அமைக்கப்படுகிறது.ஒவ்வொரு மாடியிலும் ஒரு கோவில் அமைய உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான கோவிலும் இடம் பெறுகிறது. இதன் மீது மேற்கு நோக்கி பார்க்கும் நிலையில் சதாசிவ மூர்த்தி சிலை அமைக்கப்படுகிறது.தற்போது, அடித்தளம் முடிந்து, முதல் மாடிக்கான வேலைகள் துவங்கி உள்ளது. இன்னும் ஒன்னரை ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுகுறித்து, கங்கை வராக நதீஸ்வரர் கோவிலின் தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார் கூறும்போது, 'பழமைவாய்ந்த கங்கைவராக நதீஸ்வரர் கோவிலின் மூலவர் லிங்கம் பதினாறு பட்டைகளை கொண்ட மிக அபூர்வமான ஷோடச லிங்கமாகும். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை அகஸ்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் கூறுகிறது.அகஸ்திய முனிவருக்கு சிவ பெருமான் காட்சியளித்ததை நினைவுகூறும் வகையில், 5 முகங்கள், 10 கைகளுடன் சதாசிவ மூர்த்தி சிலை அமைக்கப்படுகிறது. சதாசிவ மூர்த்தியின் மடியில் மனோன்மணி அம்மன் அமர்ந்து ஆசிர்வதிக்கும் வகையில் சிலை அமைக்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை