புதுச்சேரி : புதுச்சேரியில் 12 பேரிடம் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தை கூறி ரூ. 19.36 லட்சம் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் திருடியது. லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்து வேலை செய்து சம்பாதிக்கலாம் என கூறினார். அதனை நம்பி, மர்ம நபர் கொடுத்த டாஸ்க்குகளை முடித்தார். அதன் மூலம் பால்ராஜ்க்கு சிறிய அளவு பணம் வந்தது. அதன்பின்பு, ஆன்லைனில் முதலீடு செய்ய கூறினர். பால்ராஜ், ரூ. 7.50 லட்சம் முதலீடு செய்தார். பணம் அனுப்பிய பின்பு மர்ம நபர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.அதேபோன்று, நைனார்மண்டபத்தை சேர்ந்த சூர்யகுமார் மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தொலைதொடர்பு அதிகாரி பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார். உங்களது மொபைல்போன் சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால், மொபைல் எண், ஆதார் எண் முடக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த புகாரில் இருந்து விடுவிக்க ரூ. 2.40லட்சம் செலுத்த வேண்டும் என மிரட்டி உள்ளார்.சூர்யகுமார் பணத்தை செலுத்திய பின்பு விசாரித்தபோது, சைபர் கிரைம் மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது.இதேபோல், காரைக்காலை சேர்ந்த மணிவண்ணனை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலை என தெரிவித்துள்ளார். அதை நம்பி ரூ. 2.28 லட்சம் பணம் செலுத்தி ஏமாந்தார். அதுபோல் அரியாங்குப்பம் நாராயணன் ரூ. 1.79 லட்சம் பணமும், ஹேமலதா என்பவரிடம் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி ரூ. 16 ஆயிரம், தட்டாஞ்சாவடி லுாயிமேரி என்பவரிடம் ரூ. 15 ஆயிரம் ஏமாற்றினர்.மாகியைச் சேர்ந்த ஷில்பா என்பரிடம், வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறி மிரட்டி ரூ. 74 ஆயிரம் பணம் பறித்தனர். சுல்தான்பேட்டை இர்ஷாத் அகமது மொபைல்போனுக்கு வந்த லிங்கை ஒப்பன் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 29 ஆயிரம் பணம் திருடப்பட்டது. காரைக்காலை சேர்ந்த ஜெயராஜாகுமார் என்பவரின் மகன் ஆன்லைனில் கேம் விளையாடியபோது மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க் ஓப்பன் செய்தபோது, ரூ. 47 ஆயிரம் திருடப்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ரேவதி, 29; இவரது மொபைல் வாட்ஸ் அப்பில், வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவல் வந்தது. தகவலில் வந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, தனியார் நிறுவனத்தில் பிட்காயின் கிரிப்டோகரன்சி மூலம் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். ரேவதி முதலில் சிறிய தொகையை முதலீடு செய்தார். அதற்கு உடனடியாக லாப பணம் வந்தது. அதனால் தொடர்ந்து, பல தவனைகளில் ரூ. 5.03 லட்சம் வரை முதலீடு செய்தார்.அவரது ஆன்லைன் டேஸ்போர்டில் இருந்த பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த ரேவதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் நேற்று முன்தினம் மட்டும் 12 நபர்களிடம், ரூ. 19.36 லட்சம் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் திருடியுள்ளது.