புதுச்சேரியில் 2 வீட்டை உடைத்து கொள்ளை; அமெரிக்காவில் இருந்து புகார் அளித்த டாக்டர்
புதுச்சேரி : தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், புதுச்சேரி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவம் அதிகரிக்க துவங்கி உள்ளது. கதிர்காமம் மற்றும் ரெட்டியார்பாளையத்தில் டாக்டர்கள் வீட்டை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமம், தட்சிணாமூர்த்தி நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் கண்ணன். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி முதல்வர். இவரது மனைவி ஜிப்மரில் டெக்னிக்கல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 31ம் தேதி சேலத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு சென்று, மறுநாள் 1ம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பினர்.அப்போது. வீட்டின் வாசல் கதவு திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறைகள் அனைத்தும் திறந்து பொருட்கள் சிதறி கிடந்தது.பின்பக்க கதவு நெம்பி திறந்து, கதவின் பூட்டு உடைந்த நிலையில் கிடந்தது. அறைகளில் இருந்த கபோர்டுகள் திறக்கப்பட்டு துணிகள் அலங்கோலமாக கிடந்தது. முதல் மாடி அறையில் இருந்த லாக்கர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதில், 3 சவரன் தங்க வளையல், அரை சவரன் மோதிரம் இருந்தது.இது தொடர்பாக கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து லாக்கரை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அமெரிக்காவில் இருந்து புகார்
ரெட்டியார்பாளையம் திருநகரைச் சேர்ந்த டாக்டர் குடும்பத்தினர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்களின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டு வேலைக்கார பெண்மணி தினசரி வீட்டை சுத்தம் செய்து வந்தார். வீட்டை சுற்றி அமைத்துள்ள சி.சி.டி.வி., மூலம் ரெட்டியார்பாளையம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை அமெரிக்காவில் உள்ள டாக்டர் குடும்பத்தினர் தினசரி கண்காணித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு டாக்டர் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள், பெரிய கடப்பாறையால் வீட்டின் கதவை உடைத்து திறந்து, வீட்டிற்குள் சென்று அறைகளில் உள்ள பொருட்களை எடுத்துள்ளனர். இதனை அமெரிக்காவில் இருந்து சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் கண்காணித்த டாக்டர் குடும்பத்தினர், ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், சி.சி.டி.வி., தொகுப்பை அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் செல்வதிற்குள் வீட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். வீட்டின் உரிமையாளர் அமெரிக்காவில் இருப்பதால், வீட்டிற்குள் இருந்த எந்தெந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது என தெரியவில்லை. கேரளாவில் வசிக்கும் டாக்டரின் மகளை வரவழைத்து புகார் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். தீபாவளி நெருங்குவதால்...
தீபாவளி பண்டிகை வரும் அக். 31ம் தேதி கொண்டாட்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வழக்கமாக திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கும். தீபாவளிக்கு தேவையான பண தேவையை பூர்த்தி செய்ய குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் வழிப்பறி திருட்டில் அதிக அளவில் ஈடுபடுவர். அந்த வகையில் புதுச்சேரி வடக்கு சரகத்தில் 2 டாக்டர்கள் வீட்டை உடைத்து திருடியும், சாரம் பகுதியில் 2 பெண்களிடம் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.