| ADDED : ஜூலை 03, 2024 11:58 PM
பண்ருட்டி : ஊதிய உயர்வு வழங்க, துப்புரவு ஊழியரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் வெங்கடேசன்,42; பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் 2013ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், பத்தாண்டு காலம் பணி நிறைவு செய்ததால் தேர்வுநிலை பணியாளராக நியமனம் செய்து, ஊதிய உயர்வு அளிக்கும்படி நகராட்சியில் மனு அளித்தார்.அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து, ஊதிய உயர்வு அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி, நகராட்சி அலுவலக சுகாதாரப் பிரிவில் உதவியாளராக பணிபுரியும் கதிரவன்,55; என்பவர், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பணம் கொடுக்க விருப்பம் இல்லாத வெங்கடேசன், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதையடுத்து, கடலுார் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், நேற்று காலை 11:00 மணிக்கு பண்ருட்டி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருந்தனர்.போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் வெங்கடேசன், ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரம் ரூபாயை கதிரவனிடம் கொடுத்தார். அப்போது, கதிரவனை போலீசார் கையும் களவுமாக கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.