உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரெஞ்சியர் ஆட்சியில் தமிழர் கட்டிய பெரிய மணிக்கூண்டு

பிரெஞ்சியர் ஆட்சியில் தமிழர் கட்டிய பெரிய மணிக்கூண்டு

புதுச்சேரி குபேர் மார்க்கெட் கடைகளுக்கு மைய பகுதியில் மூன்று அடுக்காக கடிகாரத்துடன் கம்பீரமாக இருப்பது பெரியமணிக்கூண்டு. பிரெஞ்சியர் ஆட்சியில் அனைவருக்கும் காலத்தின் அருமையை உணர்த்திய காலக்கடிகாரம் இது தான். இந்த கடிகாரத்தை பார்க்காமல் வியாபாரிகளின் எந்த நொடியும் அக்காலத்தில் நகர்ந்ததில்லை. இதை கட்ட பிள்ளைசுழி போட்டவர் பிரெஞ்சியர் ஆட்சியில் துபாசியாக பணியாற்றியவர் தியாகு முதலியார். பிரெஞ்சியரின் முதல் துபாசியான தானப்பா முதலியின் குடும்ப வாரிசான அவர், கடந்த 1780-1849 காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். மிகப்பெரிய செல்வந்தரான அவர், புதுச்சேரி மக்கள் கூடும் இடத்தில் ஒரு மணிக்கூண்டை கட்ட முடிவு செய்தார். அதற்கான கடிகாரத்தை பிரான்சில் உள்ள பொறியாளர் வேகனரை மூலம் வடிமைக்க முடிவு செய்து, ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக 1849ல் அவர் மரணமடைந்தார். அதையடுத்து அவரது சகோதாரர் மகன் தைரியநாதன், தியாகு முதலியாரின் கனவினை நிறைவேற்ற உறுதி பூண்டார். அதன்படி, மக்கள் அதிகம் கூடும் தற்போதுள்ள பெரிய மார்க்கெட் மைய பகுதியில் மணிக்கூண்டு கட்ட திட்டமிட்டார்.ஆனால் அந்த இடம் 1699ல் மரியா தியுஸ் என்ற பெண்மணி, பேராயர் கெமனேருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு இருப்பதை அறிந்தார். அதையடுத்து 1851ல் அங்கு மணி கூண்டு கட்ட பிரெஞ்சு அரசிடம் அனுமதி கேட்டபோது, ஒப்புதல் அளித்தது.இருப்பினும் பிரெஞ்சு அரசு, நான்கு மாடிகளுடன் லுாயி கெர் வடிமைப்பில், அதாவது நாற்கோண வடிவில் கட்ட வேண்டும். நில உரிமையாளருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து, அனுமதி அளித்தது.அதை தொடர்ந்து 1851ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி துவங்கிய கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. 1852ல் ஜூலை 29ம் தேதி இந்த மணிக்கூண்டு திறந்து வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.மணி கூண்டு நாற்கோண வடிவில் உள்படிக்கட்டுகளுடன், மூன்று அடுக்குகளை கொண்டு கம்பீரமாக கட்டப்பட்டுள்ளது. ஒவ்வாரு மாடியிலும் சுற்று மாடம், கைப்பிடியாக இரும்பு தடுப்பும் வைக்கப்பட்டது.மூன்றாவது மாடியில் பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட கடிகாரம் பொருத்தப்பட்டு, உச்சியில் கணீரென்று ஒலி எழுப்பி, மணியை சொல்லியது. இப்போது தான் நாம் மணிகூண்டு என்று சொல்கிறாம். அந்த காலத்தில் மக்கள் அதை கிடார் கூண்டு என்றே அழைத்து வந்துள்ளனர்.இந்த மணிக்கூண்டு தொடர்பான வரலாற்று செய்திகள் சிறிய கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் தியாகு முதலியார் புதுச்சேரி மாநகரத்தாருக்கு கொடுத்தது. கோலேனியால் இன்ஜினியர் பிளான் செய்து வேலை நடத்தி கட்டினது என்று வாசகங்கள் பளீச்சிடுகின்றன. பிரெஞ்சியர் ஆட்சியில் தமிழர் கட்டிய மணிக்கூண்டாக இது இன்றைக்கும் புதுச்சேரியில் வரலாற்று நினைவு சின்னமாக திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சாண்டில்யன்
செப் 24, 2024 05:59

தஞ்சை கருந்தட்டாங்குடி பகுதியில் ஜைன தொடக்கப்பள்ளியில் மணிக்குமணி மணியடிக்கும் வேலையை செய்தார்கள் அந்த ஏரியா முழுவதும் கேட்க்கும் அந்த மணி கம்பியில் தொங்க விடப்பட்ட ஒரு காரின் இரும்பு சக்கரம்தான் இன்றும் இது தொடர்கிறதா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை