இ.சி.ஆர்., விரிவாக்க பணிகளுக்கு கெடு
சென்னை,: சென்னை - புதுச்சேரி இடையே, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை 135 கி.மீ., நீளம் உடையது. இந்நிலையில், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக நடந்து வருகிறது.இதற்காக, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, சாலையை விரிவாக்கம் செய்யவும் நெடுஞ்சாலைத் துறையால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 11.4 கி.மீ.,க்கு சாலையை விரிவாக்கம் செய்வதற்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.விரிவாக்க பணி முடியாததால், திருவான்மியூர், கொட்டிவாக்கம், அக்கரை உள்ளிட்ட இடங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.இது குறித்து அறிந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, சாலை, அதை சார்ந்த பணிகளில் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகளை அழைத்து, தலைமை செயலகத்தில் நேற்று, ஆய்வு நடத்தினார். அப்போது, நெடுஞ்சாலை துறையினர், திருவான்மியூர் - அக்கரை சாலை விரிவாக்க பணிகளை முடிப்பதில், கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.கூட்டத்தில், அமைச்சர் வேலு பேசியதாவது:சாலை பணிக்கு 2.75 கி.மீ., நில எடுப்பு பணி நிலுவையில் உள்ளது. மின்சார பெட்டிகள், நிலத்திற்கடியில் வடங்கள் மாற்றாததால், சாலை பணிக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். இப்பணிகளை முடித்தால் மட்டுமே, சாலை பணிகளை வேகப்படுத்த முடியும். அதனால், தொடர்புடைய அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை, இரு மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.