புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு ரத்து செய்யக் கோரி 18ல் பந்த் இண்டியா கூட்டணி அறிவிப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி, வரும் 18ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்போவதாக இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது.புதுச்சேரியில் சமீபத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இதற்கு, காங்., தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.இதனால், முதல் 200 யூனிட் வரை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திற்கு மட்டும் அரசு மானியம் வழங்கும் என அறிவிக்கப்பட்டது.இருப்பினும், மின் கட்டண உயர்வை முழுதுமாக ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்துவது குறித்து இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், முதலியார்பேட்டை கம்யூ., கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம், வி.சி., கட்சி முதன்மை செயலாளர் தேவ பொழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின்பு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கூறியதாவது; ஏழை மக்கள் பாதிக்கும் வகையில் மிக அதிக அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்சாலைகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்தினோம். இதற்கு பின் ஒரு சில மாற்றங்கள் செய்து மின் கட்டணம் குறைத்து விட்டதாக அரசு நாடகம் நடத்தி உள்ளது. மின் கட்டணத்தை மக்கள் பாதிக்காத வகையில் குறைக்க வேண்டும். பிரீபெய்டு மீட்டர் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை அரசு தர வேண்டும். மின் கட்டண ரசீதில் இதர கட்டணத்தை குறைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.