புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், மேலிட தலைவர்களை சந்தித்து முறையிடுவதற்காக டில்லி சென்றுள்ளனர்.புதுச்சேரியில் என்.ஆர்., காங்., - பா.ஜ., கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆட்சி அமைந்தது முதல் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு சுயேச்சைகள் வாரியத் தலைவர்கள் பதவி கேட்டு வருகின்றனர்.லோக்சபா தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்தும்கூட பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். இதில் கொந்தளித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.சமீபத்தில், கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து, முதல்வர் ரங்கசாமி மீதும், பா.ஜ., அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றிரவு 8:40 மணிக்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், வெங்கடேசன், ஆதரவு சுயேச்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டில்லிக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுடன், பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி.,யும் சென்றுள்ளார்.டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதால் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வருடன் ஆலோசனை
சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை, பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., நேற்று மாலை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, பா.ஜ., மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரை சந்தித்து தன்னை பற்றி குறை கூறியது தொடர்பாக செல்வகணபதியிடம் ரங்கசாமி கேட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சி மேலிடத்தில் தெரிவிக்க உள்ளதாக செல்வகணபதி தெரிவித்தார். இரு கட்சிகளும் சுமூகமாக செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.