உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், இதர சலுகைகளை 12 வாரத்திற் குள் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியில் 1992ம் ஆண்டு பாப்ஸ்கோ நிறுவனம் துவங்கப்பட்டது. துவக்கத்தில் மூன்று ரேஷன் கடைகள் நடந்தன. தொடர்ந்து காய்கறி அங்காடிகள், மெடிக்கல், பெட்ரோல் பங்குகள், மதுபானம் விற்பனை உள்ளிட்டவற்றை பாப்ஸ்கோ துவங்கியது. இதற்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.ஆனால் நிர்வாக திறன்மையின்மை, ஆட்கள் அதிகமாக திணிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொன்றாக மூடப்பட்டுவிட்டன. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.அதையடுத்து பணியில் இருக்கும் 130 ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 6 பேர், ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 6 பேர் என, மொத்தம் 142 பேர் மூன்று மனுக்களை சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே தாக்கல் செய்திருந்தனர். அதில் கடந்த 2018ம் ஆண்டு முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இ.எஸ்.ஐ., உள்ளிட்ட இதர சலுகைகளையும் பெற முடியவில்லை. எனவே 18 சதவீத வட்டியுடன் ஊழியர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என, தெரிவித்து இருந்தனர்.இவ்வழக்கு அண்மையில் நீதிபதி இளந்திரையன் முன்னிலையில், விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், நிலுவை சம்பளம், இதர சலுகைகளை 12 வாரத்திற்குள் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என, அதிரடியாக உத்தரவிட்டார். இவ்வழக்கில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ ஆஜரானார்.

புதுச்சேரி அரசுக்கும் செக்

வழக்கமாக புதுச்சேரி அரசு ஊழியர்கள் பிரச்னையில் சம்பள பிரச்னையில் ஐகோர்ட் தலையிட்டு தீர்ப்பளிக்கும்போது, பொதுவாக நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கும். அப்போது எங்களுக்கு நிதி இல்லை; பணம் இல்லை என்று அரசு சார்பு நிறுவனங்கள் கைவிரிக்கும். மீண்டும் கோர்ட் அவமதிப்பு தொடர்ந்து நிலுவை சம்பளத்தை பெற நடையாய் நடக்க வேண்டும்.ஆனால் பாப்ஸ்கோ ஊழியர்கள் பிரச்னையில், பாப்ஸ்கோ நிறுவனம் புதுச்சேரி அரசின் கீழ் தான் வருகிறது. எனவே புதுச்சேரி அரசே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நிலுவை சம்பளம், இதர சலுகைகளை, வட்டியுடன் தர வேண்டும் என்று உத்தரவிட்டு செக் வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ