உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் காரில் முதல்வர், கவர்னர் கடற்கரையில் பயணம்

புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் காரில் முதல்வர், கவர்னர் கடற்கரையில் பயணம்

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி தனது புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் காரில், கவர்னர் ராதாகிருஷ்ணனுடன், கடற்கரை சாலையில் பயணம் செய்தார்.முதல்வர் ரங்கசாமி யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக் பிரியர். ஒவ்வொரு தேர்தல் ஓட்டுப்பதிவின் போதும், அந்த பைக்கிலேயே, ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, ஓட்டுப்போடுவதை சென்டிமென்டாக வைத்துள்ளார்.சமீபத்தில் தன்னுடைய யமஹா பைக்கை சென்னைக்கு அனுப்பி பழுது பார்த்து கொண்டு வந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த 1997ம் ஆண்டு, ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது முதன் முதலில் அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தினார். அந்த கார் பழுதானதால் வீட்டில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்.சமீபத்தில் அந்த காரை, துாத்துக்குடியில் பழுது பார்த்து, புதுச்சேரிக்கு கொண்டு வந்தார். இதையடுத்து உள்ளூரில் அந்த காரில் சுற்றிப்பார்க்க திட்டமிட்டிருந்தார்.இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமியிடம், நேற்று இது குறித்து விசாரித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி தனது அம்பாசிடர் காரில் உடனடியாக கவர்னர் மாளிகை சென்றார். அங்கு அவரை கவர்னர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.அப்போது முதல்வர் தனது புதுப்பிக்கப்பட்ட காரில் பயணம் செய்ய கவர்னருக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற கவர்னர், அந்த காரில் அவருடன் இணைந்து பயணம் செய்தார். இருவரும் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, பழைய சாராய ஆலையில் இருந்து கடற்கரை சாலையில் சிறிது நேரம் பயணித்தனர்.இதையடுத்து கவர்னர் மாளிகைக்கு சிறிது நேரத்தில் திரும்பி வந்தனர். இந்த கார் பயணம் தொடர்பாக, முதல்வருக்கு, கவர்னர் நன்றி தெரிவித்தார்முதல்வர் ரங்கசாமி கூறுகையில், 'இது நான் முதன் முதலில் வாங்கிய ராசியான அம்பாசிடர். இதில் கவர்னருடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சி. புதுச்சேரி மாநிலத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு வர, என்னென்ன முயற்சிகள், நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து இருவரும் பேசினோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ