உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பஸ்சில் பறிகொடுத்த 25 சவரன் நகை நள்ளிரவு வரை அலைக்கழிக்கப்பட்ட பெண் வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவு 

அரசு பஸ்சில் பறிகொடுத்த 25 சவரன் நகை நள்ளிரவு வரை அலைக்கழிக்கப்பட்ட பெண் வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவு 

புதுச்சேரி: அரசு பஸ்சில் பறிகொடுத்த 25 சவரன் நகை குறித்து புகார் பெறாமல் நள்ளிரவு வரை அலைக்கழிக்கப்பட்ட பெண் குறித்து எதிர்கட்சி தலைவர் சிவா, முதல்வர் ரங்கசாமி கவனத்திற்கு கொண்டு சென்றதால், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்தசாலை, புது நகர் கண்டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி சுமைனாபானு, 24; சென்னையில் உள்ள தங்கையின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டில் இருந்த 25 சவரன் நகைகளை சூட்கேசில் வைத்து கொண்டு, மாமியார் ஜீவா, 55; மற்றும் தனது பிள்ளைகளுடன் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வீட்டில் இருந்து ஆட்டோ மூலம் புதிய பஸ் நிலையம் சென்றார்.பின், இ.சி.ஆர்., வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டார். தனது பேக், சூட்கேசை பஸ்சில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்திருந்தார். பஸ் காலாப்பட்டு பிள்ளைச்சாவடி அருகே சென்றபோது, லக்கேஜ் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சுமைனாபானுவின் சூட்கேஸ் மாயமானது. இதை அறிந்து கூச்சலிட்ட சுமைனாபானு பஸ்சை நிறுத்தினர்.உடனே கண்டக்டர் பஸ்சில் இருந்து யாரையும் இறங்க விடாமல், காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பயணிகளை போலீசார் சோதித்தபோது சூட்கேஸ் கிடைக்கவில்லை. காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல், உருளையன்பேட்டைக்கு சென்று முறையிடுமாறு அனுப்பி வைத்தனர்.உருளையன்பேட்டை போலீசில் சுமைனா பானு புகார் அளித்தார். போலீசார் புகார் பெற்று கொள்ள மறுத்து சம்பவம் நடந்த இடத்தில் புகார் தெரிவிக்க கூறினர். சுமைனாபானு கோட்டக்குப்பம் போலீசாரிடம் சென்றார்.கோட்டக்குப்பம் போலீசாரும் புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்து புதுச்சேரிக்கு செல்ல திருப்பி அனுப்பினர். நள்ளிரவு 1:00 மணி வரை அலைக்கழிக்கப்பட்ட சுமைனா பானு, இது தொடர்பாக தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் மூலம் எதிர்கட்சி தலைவர் சிவாவை சந்தித்து முறையிட்டார்.எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் அனைவரும், முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் நேற்று காலை சந்தித்தனர். அப்போது நடந்த சம்பவம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பது குறித்து தெரிவித்தனர்.அப்போது, முதல்வர் ரங்கசாமி, உருளையன்பேட்டை போலீசாரை வீட்டிற்கு அழைத்து பேசி, வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கண்டறிய உத்தரவிட்டார். போலீஸ் எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், லட்சுமி சவுஜன்யா, பக்தவாச்சலம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை