வீர்கதா விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு
புதுச்சேரி : வீர்கதா விருது பெற்ற வ.உ.சி. அரசு பள்ளி மாணவர் விஜய விவேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி, வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 வகுப்பு மாணவர் விஜய விவேஷ்குமார். தேசிய அளவில் இந்திய பாதுகாப்பு துறை மற்றும் கல்வித்துறை நடத்திய வீர்கதா போட்டியில் கலந்து கொண்டு, பழங்குடியின மக்களின் நிலங்களை மீட்க ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய பிர்சா முண்டா வாழ்கை வரலாற்றை ஓவியமாக வரைந்து, வீர்கதா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து,டில்லியில் நடந்த குடியரசு தினவிழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வீர்கதா விருது, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.வீர்கதா விருது பெற்று புதுச்சேரி திரும்பிய மாணவர் விஜய விவேஷ்குமாருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கி, விருது பெற்ற மாணவர், வழிகாட்டிய நுண்கலை ஆசிரியர் முருகேச பாரதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.