உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண் வயிற்றில் மருத்துவ உபகரணம் வைத்து தைப்பு; ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

பெண் வயிற்றில் மருத்துவ உபகரணம் வைத்து தைப்பு; ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

புதுச்சேரி : மகப்பேறு அறுவைசிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் மருத்துவ உபகரணம் வைத்து தைத்த தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திற்கு, 7 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி நல்லவாடை சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பிரபாவதி, தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டார். கடந்த 2010 செப்டம்பர் 14ம் தேதி வலி அதிகரித்ததால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து, மாத்திரை சாப்பிட்டார். வலி குறையாததால் புதுச்சேரி அரசு மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லுாரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு, குடல்வால் பிரச்னை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அறுவை சிகிச்சைக்காக வயிற்றுப் பகுதியை கிழித்தபோது, அடிவயிற்றில் மருத்துவ உபகரணம் (ஆர்ட்ரி பர்செப்ஸ்) ஒன்று இருப்பது தெரியவந்ததால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றில் இருந்த மருத்துவ உபகரணம் மற்றும் குடல்வால்வு அகற்றப்பட்டது. இதுகுறித்து பிரபாவதி மருத்துவர்கள் கவனக்குறைவு காரணமாக தனக்கு ஏற்பட்ட பாதிப்பு, சேவை குறைபாட்டிற்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு கேட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், பிரபாவதிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்தபோது கவனக்குறைவாக மருத்துவ உபகரணத்தை நோயாளியின் அடிவயிற்றில் வைத்து தைத்ததால், பல்வேறு தொல்லைகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாகி உள்ளார். ஆகையால், பிரபாவதிக்கு ரூ. 7 லட்சம் நஷ்டஈடு, வழக்குத் தொகையாக ரூ. 20,000 என மொத்தம் ரூ. 7 லட்சத்து 20 ஆயிரம் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், தீர்ப்பின் நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் வழங்கிட உத்தரவிடப்பட்டது. தவறும் பட்சத்தில் 9 சதவீதம் ஆண்டு வட்டி மேற்படித்தொகை செலுத்தும் வரை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ