| ADDED : ஜூன் 22, 2024 04:31 AM
புதுச்சேரி : 'ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் குழுவின் பரிந்துரையை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, பா.ஜ., கல்வியாளர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து, கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நாகேஸ்வரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:தமிழகத்தில் நாங்குநேரி பள்ளியில் நடந்த சில ஜாதி மோதல்கள் காரணமாக, அதை தடுக்கும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மனதை புண்படும் வகையில் நெற்றியில் திலகம் இடக்கூடாது, கையில் கயிறு கட்டக் கூடாது எனக் கூறி உள்ளது.இது, இந்து சமுதாயத்தின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் உள்ளது. மேலும், இடதுசாரி சிந்தனையுடன் பாடத்திட்டத்தில் காவி மயம் கூடாது எனக் கூறியுள்ளது நகைப்பு கூறியதாக உள்ளது.மேலும், தமிழக பள்ளியில் மாணவர் தேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டது மிகவும் ஆபத்தானது. இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய பிளவு மற்றும் மோதல் சூழ்நிலை உருவாகும். தமிழக அரசு உடனடியாக இந்த பரிந்துரையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.