புதுச்சேரி: தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத அரசு இடங்கள் பெறாததை கண்டித்து தி.மு.க., காங்., சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.புதுச்சேரி சட்டசபையில், நேற்றைய பட்ஜெட் மானிய விவாதம் காலை 9:35 மணிக்கு துவங்கியது. எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மருத்துவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் இடங்களை அரசுக்கு தர தேசிய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. கட்டாயமாக பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளில் இடம் தரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சில் சொல்லியும் கூட புதுச்சேரியில் பின்பற்றவில்லை.சபாநாயகர் செல்வம்: இது தொடர்பாக தேசிய மருத்துவ கவுன்சில் பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்கட்சி தலைவர் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கலாம். எதிர்க்கட்சி தலைவர் சிவா: மத்திய அரசு தான் சொல்லுகிறது. நேரு(சுயேச்சை): தனியார் மருத்துவக்கல்லுாரி அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை காட்டிலும் அதிகம் பணம் கேட்கின்றன. இதையும் அரசு தடுக்கணும். நாஜிம் (தி.மு.க.,): அரசு பள்ளி மாணவர்களுக்கு பத்து சதவீதம் ஒதுக்கீடு என, சொல்லியுள்ளீர்கள். எத்தனை பேர் சென்றார்கள். சபாநாயகர் செல்வம்: எதிர்க்கட்சி தலைவர் சிவா சொல்வது முக்கிய விஷயம். மத்திய அரசு ஆணை இருந்தால் தாருங்கள்.எதிர்க்கட்சி தலைவர் சிவா: இந்த விஷயம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை. மத்திய அரசிடம் நேரடி தொடர்பில் இருக்கும் தலைமைச்செயலர், சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும். நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சபாநாயகர் செல்வம்: தலைமை செயலர், துறை செயலர்களை முதல்வர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி முதல்வர் உடன் கலந்து பேசி உடன் நடவடிக்கை எடுக்கலாம். அதிகாரிகளை அரசாணையை எடுத்துவர சொல்லலாம். எதிர்க்கட்சி தலைவர் சிவா: தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை பெறாத புதுச்சேரி அரசினை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். சபாநாயகர் செல்வம்: இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறோம். ஆனால் நீங்கள் வெளிநடப்பு என்கின்றீர்கள். உங்களுடைய விருப்பம். தொடர்ந்து தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டு இடங்களை பெறாததை கண்டித்து, எதிர்கட்சி தலைவர் சிவா, தி.மு.க., எம்.எல்.ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாராஜன், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சுயேச்சை எம்.எல்.ஏக்கள் நேரு, அங்காளன் ஆகியோரும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவித அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டு விவகாரத்ததால் சபையில் அமளி, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.