ஏரி, குளங்களை துார்வர மாஜி எம்.பி., கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்களை துார்வார வேண்டும் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் கடந்த 8, 9ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் பதிவான 15.5 செ.மீ., மழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் மிதந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.எனவே, வரும் பருவ மழை காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இப்போதே அரசு துரிதப்படுத்த வேண்டும். மழைப் பொழிவிலிருந்து கிடைக்கும் நீர் மக்களை பாதிக்காத வகையிலும், அது ஆண்டின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கடலில் சேராத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.வடிகால் வாய்க்கால்கள் துார்வாரப்பட வேண்டும். வடிகால் வாய்க்கால்கள் முறைப்படி கட்டவில்லை. சில இடங்களில் வாய்க்கால் அமைக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. இவற்றையெல்லாம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.நீர்ப் பாதை ஆக்கிரமிப்புகளை முன்னுரிமை அடிப்படையில் அகற்றப்பட வேண்டும். கழிவுநீர் வாய்க்காலில் அடைத்துக் கொண்டுள்ள பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்களை துார்வார வேண்டும்.இவ்வாறு அவர், கூறியுள்ளார்.