வாசகர்கள் கருத்துகள் ( 1 )
All the best God bless him and his wishes come true and thru
புதுச்சேரி: புதுச்சேரி அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை வகுத்துக் கொண்ட அகில இந்திய என்.ஆர்.காங்., தற்போது தமிழக அரசியலிலும் முறைப்படி கால்பதிப்பதற்கான தீவிர ஆயத்தப் பணிகளை துவக்கியுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கடந்த 2011 பிப்ரவரி 7ம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 'அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். 'என்.ஆர்' என்ற எழுத்துகள் அவரது சொந்த பெயரைக் குறிப்பதாக தொடக்கத்தில் விமர்சனங்கள் எழுந்தபோதிலும், 'அகில இந்திய நமது ராஜ்ஜியம்' என்பதன் சுருக்கமே அது என அவர் பதிலடி கொடுத்தார். இருப்பினும், 'அகில இந்தியக் கட்சி' எனப் பதிவு செய்துவிட்டு, புதுச்சேரியோடு மட்டும் கட்சியின் வரம்பைச் சுருக்கிக் கொண்டது, ரங்கசாமியின் மனதில் நீண்டகாலமாகக் குறையாகவே இருந்து வந்தது. அண்டை மாநிலமான தமிழகத்தில் தனது கட்சியின் கிளையைப் பரப்பி, மாநில அரசியலிலும் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பது அவரது பல நாள் விருப்பமாகும். சென்ற சட்டசபை தேர்தலின்போதே, தமிழகத்தில் தங்களது தடம் பதிக்கும் பிள்ளையார் சுழி முயற்சியை என்.ஆர். காங்கிரஸ் முதற்கட்டமாகத் தொடங்கியது. த.வெ.க., மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்தோ அல்லது புதிய வியூகத்தின் அடிப்படையிலோ களமிறங்க திட்டமிடப்பட்டது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரங்கசாமியின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் என்.ஆர்.காங்கிரசில் இணையத் தொடங்கினர். ஆனால், புதுச்சேரியில் பா.ஜ., உடனான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இறுதி நேரம் வரை நீடித்ததால், தமிழகத்தில் கட்சியை முறைப்படி விரிவுபடுத்தும் திட்டத்தை கடைசி நேரத்தில் தற்காலிகமாகக் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமீபத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் விழா, சென்னை தேனாம்பேட்டையில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் தொண்டர்களும் திரண்டு வந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மேடையில் பேசிய தமிழக தலைவர்கள் முதல்வர் ரங்கசாமியின் எளிமையாக அணுகு முறை காமராஜரை நினைவுப்படுத்துகிறது. அவர், தமிழக அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பும் விடுத்தனர். இது என்.ஆர்.காங்கிரஸ் தலைமைக்கு புதிய அரசியல் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மவுண்ட் ரோட்டில் கட்சியின் தமிழகத் தலைமை அலுவலகத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் கட்சியின் முறைப்படியான தொடக்கத்தை அறிவிக்கும் வகையில், சேலம் அல்லது செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். இதற்கான பணிகளை என்.ஆர்.காங்., அமைச்சர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எளிமையான முதல்வர் என்ற பிம்பத்துடனும், தனித்துவமான மக்கள் செல்வாக்குடனும் விளங்கும் ரங்கசாமி, தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளார். திராவிடக் கட்சிகள் ஆதிக்கம், த.வெ.க., புதிய அரசியல் தாக்கம் மோதும், தமிழக அரசியல் களத்தில், என்.ஆர்.காங்கிரசின் இந்த வருகை எந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வரவிருக்கும் மாநில மாநாடும் தேர்தல் வியூகங்களுமே தீர்மானிக்கும்.
: தமிழக விரிவாக்கம் குறித்துப் பேசிய என்.ஆர்.காங்., கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன், தமிழகத்தில் முதல்வர் ரங்கசாமி மீது அன்பும் மரியாதையும் கொண்ட தொண்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் என்.ஆர்.காங்கிரசில் இணைய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் முடிவை உறுதியாக எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
All the best God bless him and his wishes come true and thru