எம்.ஜி.ஆர். சிலையை திறக்க கல்வெட்டுடன் வந்த மாஜி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,கைது வில்லியனுாரில் திடீர் பரபரப்பு
வில்லியனுார்,: வில்லியனுாரில் எம்.ஜி.ஆர்., சிலையை திறக்கப்போவதாக, கல்வெட்டுடன் வந்த அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவினரை போலீசார் கைதுசெய்தனர்.வில்லியனுார் மூலக்கடையில், எம்.ஜி.ஆர். சிலை அமைத்து, கடந்த 1996ல் புதுச்சேரி அ.தி.மு.க., செயலாளர் நடராஜன் முன்னிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா திறந்து வைத்தார். போக்குரவத்திற்கு இடையூறாக இருந்த இச்சிலையை கடந்த அக்., 11ம் தேதி நள்ளிரவில் அகற்றினர். அதன் பிறகு, பைபாஸ் சாலை விநாயகர் கோவில் அருகில் புதிதாக எம்.ஜி.ஆர்., சிலை அமைத்து, கடந்த மாதம் 28ம் தேதி மாலை, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் ஆதரவாளர்களுடன் சென்று திறந்து வைத்தார்.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவினர், முன்னாள் எம்.எல்.ஏ.,ஓம்சக்தி சேகர் தலைமையில், அ.ம.மு.க., நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர், புதிய கல்வெட்டுடன் அந்த எம்.ஜி.ஆர்., சிலையை திறக்கப்போவதாக கூறி, அதனருகே திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேற்கு பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையில் திரண்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.தகவலறிந்த அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை, பைபாஸ் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.இரு தரப்பும், எதிர் கோஷங்கள் எழுப்பினர்.அங்கு பதட்டம் நிலவியதால், ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை, போலீசார் கைது செய்து, கல்வெட்டையும் பறிமுதல் செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தி, பின் விடுவித்தனர்.அங்கு பறிமுதல் செய்யப்பட்ட கல்வெட்டை, வில்லியனுார் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் சிலை பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.