உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிம் பயிற்சியாளர் கல்லால் அடித்து கொலை: புதுச்சேரியில் பயங்கரம்

ஜிம் பயிற்சியாளர் கல்லால் அடித்து கொலை: புதுச்சேரியில் பயங்கரம்

நால்வரிடம் போலீசார் விசாரணைபுதுச்சேரி: வம்பாக்கீரப்பாளையத்தில் ஜிம் பயிற்சியாளர் கல்லால் தாக்கி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம் தெப்பகுளம் வீதியைச் சேர்ந்தவர் வீரமணி மகன் விக்கி (எ) மணிகண்டன், 35; ஜிம் பயிற்சியாளர். அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாமிநாதன் நேற்று காலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் விக்கி பங்கேற்றார்.நேற்று மாலை 5:30 மணிக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. அதற்கு முன்னதாக, வம்பாக்கீரப்பாளையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒரு கும்பல் மதுபானம் குடித்து கொண்டிருந்தது. அங்கு விக்கி சென்றபோது அந்த கும்பலுக்கும், விக்கிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த அக்கும்பல், விக்கியை சராமாரியாக கற்களால் தாக்கியது. இதில் விக்கி மயங்கி விழுந்தார். ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 25; என்பவர் தகராறை தடுக்க சென்றார். அந்த கும்பல் மூர்த்தியையும் தாக்கியது. இதில் காயமடைந்த மூர்த்தி அங்கிருந்து தப்பித்து ஓடினார்.மயங்கி விழுந்த விக்கி தலையில், அந்த கும்பல் சாலையோரம் கிடந்த கிராணைட் கல்லை போட்டது. இதில் தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தகராறை பார்த்து, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதால், விக்கி தலையில் சாக்கு ஒன்றை போர்த்திவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது.ரத்தம் வழிந்தோடியதை பார்த்த பொதுமக்கள், போலீசாரிடம் தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த விக்கியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த மூர்த்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நால்வரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட விக்கி ஓரிரு நாட்களில் பிரான்ஸ் செல்ல திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

பீச் வாலிபால் போட்டி ரத்து

கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் சார்பில், வம்பாக்கீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரையில் 3 நாள் பீச் வாலிபால் போட்டி நடத்தினர். அதன் நிறைவு விழா நேற்று மாலை நடக்க இருந்தது. நிறைவு விழாவிற்கு சில நிமிடங்கள் முன்னதாக இக்கொலை சம்பவம் நடந்ததால், பீச் வாலிபால் போட்டி நிறைவு விழாவை போலீசார் ரத்து செய்தனர்.

போலீசிடம் தகராறு

பீச் வாலிபால் போட்டி நிறைவு விழாவில் டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பதாக இருந்தது. இதனால், பாண்டி மெரினா செல்லும் வம்பாக்கீரப்பாளையம் பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கொலை நடந்த ஆட்டோ ஸ்டாண்ட் அருகிலும் 2 போலீசார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். கொலை நடந்தபோது, ஏதோ அடிதடி பிரச்னை நடக்கிறது என நினைத்து அங்கிருந்த கும்பலை போலீசார் விரட்டி விட்டனர்.அந்த கும்பல் கலைந்து சென்ற பின்னர் தான் விக்கியை கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. குற்றவாளிகளை விரட்டி விட்டீர்கள் என, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகராறில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ