முதல்வர் வருகை ஏற்பாடு அமைச்சர் ஆலோசனை
கடலுார்: கடலுாரில் தமிழக முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கடலுார் மாவட்டத்திற்கு வருகை தந்து திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்தார். பின், கடலுார் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில் வழங்கப்படவுள்ள நலத்திட்ட உதவிகள், பல்வேறு துறைகளின் வாயிலாக துவக்கி வைக்கப்பட உள்ள திட்டப் பணிகள் மற்றும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் சரண்யா, எஸ்.பி., ஜெயக்குமார், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கமிஷனர் அனு மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.