உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலை பண்பாட்டுத்துறை, ஆரோவில் அறக்கட்டளை முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கலை பண்பாட்டுத்துறை, ஆரோவில் அறக்கட்டளை முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கலை பண்பாட்டுத்துறை மற்றும் ஆரோவில் அறக்கட்டளை இடையே, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.புதுச்சேரி மாநில கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்குப் புத்துயிர் ஊட்டும் வகையில், கலை பண்பாட்டுத்துறை மற்றும் ஆரோவில் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.சட்டசபை அலுவலகத்தில் நேற்று முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், புதுச்சேரி அரசு சார்பில், அரசுச் செயலர் நெடுஞ்செழியன் மற்றும் ஆரோவில் அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு அதிகாரி வஞ்சுளவள்ளி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.நிகழ்ச்சியில், அரசுச் செயலர் கேசவன், ஆரோவில் அறக்கட்டளை இயக்குநர் சொர்ணாம்பிகா, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கலை பண்பாட்டு கண்காட்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்களுக்கான நிகழ்ச்சி வாய்ப்புகள், ஓவிய முகாம்கள், பயிலரங்குகள் ஆகியவற்றை தொடர்ந்து வளப்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.இதன் மூலம் பல்வேறு கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள், பாரதியார் பல்கலைக்கூட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஆரோவில்லில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதனால் புதுச்சேரி கலைஞர்கள் பொருளாதார ரீதியாக பயனடைவர். ஆரோவில்லில் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அதிகம் வருவதால் அங்கு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தும் கலைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உண்டாக வழிவகை ஏற்படும். புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது, 2ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ