புதுச்சேரி: என்.ஆர்., காங்., பா.ஜ.,கூட்டணியில் விரிசல் விழுந்துள்ள சூழ்நிலையில் பா.ஜ., மேலிட குழு விரைவில் புதுச்சேரி வருகை தர உள்ளது.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதையடுத்து என்.ஆர் காங்.,- பா.ஜ., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த போதிலும், முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்கள் செயல்பாடுகளால் தான் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய நேரிட்டது என்று பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை தான் முதல்வர் அரவணைக்கிறார். என்.ஆர் காங்., கூட்டணிக்கான ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அன்மையில் டில்லி சென்ற பா.ஜ., எம்.எல்.ஏக்கள் இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ்ஜியை சந்தித்து பேசி, முறையிட்டனர்.அப்போது, ஆட்சியின் மீது கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. பல துறைகளில் ஊழல் மலிந்துள்ளது, இப்படியே போனால் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு பெரும் பின்னடைவு தான் ஏற்படும். அதனால் தற்போதிருக்கும் பா.ஜ., அமைச்சர்களை மாற்றிவிட்டு, சுழற்சி முறையில் எங்களுக்குப் பதவி வேண்டும். 28 தொகுதிகளில் ஓட்டு சரிந்துள்ளது. மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல முடிவினை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏக்களுக்கு வாரியங்களை போட்டு கட்சியை வளர்க்கலாம் என்று கோரிக்கையும் வைத்தனர்.அப்போது, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ்ஜி ஆகியோர் புதுச்சேரி கூட்டணி பிரச்னை தொடர்பாக விரைவில் மத்திய அமைச்சர் அடங்கிய பா.ஜ., மேலிட குழு புதுச்சேரியில் அனுப்பி வைக்கப்படும். எனவே இது தொடர்பாக அங்கு பேசிக்கொள்ளலாம் என உறுதியளித்தனர்.தொடர்ந்து டில்லியில் முகாமிட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் அமித்ஷா உத்தரபிரதேச கூட்ட நெரிசலில் பொதுமக்கள் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்த சென்றதால் சந்திக்க முடியவல்லை. 8 ம் தேதிக்கு பிறகு அமித்ஷா டில்லி திரும்ப உள்ளதால், அதன் பிறகு சந்திக்க நேரம் ஒதுக்குவதாக தெரிவித்து இருந்தார். இதனால் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் பா.ஜ., எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி திரும்பினர். பா.ஜ., மேலிட குழு புதுச்சேரி வந்ததும், முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அடங்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.