மதுபான ஆலை அனுமதிக்கு ரூ.15 கோடி லஞ்சம் நாராயணசாமி திடுக் குற்றச்சாட்டு
காரைக்கால்: மதுபான ஆலை ஒவ்வொன்றிற்கும் ரூ. 15 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது என, மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.காரைக்காலில் அவர் கூறியதாவது;என்.ஆர்., காங்., பா.ஜ., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. புதுச்சேரி, காரைக்காலில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல், கோவில் நில மோசடிகள் அதிகரித்துள்ளன.கடந்த காங்., ஆட்சியில் தேசிய கல்விக்கொள்கைணய ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம். புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அவசரமாக அமல்படுத்தியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைக்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். ஒவ்வொரு மதுபான ஆலைக்கும் ரூ.15 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.இது குறித்து சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும். காரைக்காலில் தரமான சாலை, மருத்துவ வசதி இன்றி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு காரைக்காலில் மருத்துவ கல்லுாரி துவங்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை செயல்படுத்தவில்லை என, கூறினார்.