4 பேரிடம் ரூ.3.10 லட்சம் மோசடி செய்த கும்பலுக்கு வலை
புதுச்சேரி : புதுச்சேரியில் 4 பேரிடம் 3.10 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்தவர் பேபிதா. இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என கூறினார் அதை நம்பி, அவர், 1.45 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அந்த நபர் கொடுக்கப்பட்ட பணியை முடித்து, அவர் செய்த லாப பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் அவர் ஏமாந்தார். மேலும், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், இவரை தொடர்பு கொண்ட நபர், பிரான்சில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி அவர் முன் தொகையாக 1 லட்சம் ரூபாய் அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் மோசடி நபரிடம் ஏமாந்தார். திருக்கனுார் பகுதியை சேர்ந்தவர் இந்திராகுமார், இவரிடம் மொபைல் போன் மூலம் பேசிய மர்ம நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 55 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். மேலும், வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் வெங்கடபதி, இவர் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.