தொழிற்சாலைகளின் மின் பாக்கியை கொண்டு நஷ்டத்தை ஈடு செய்ய ஓம் சக்தி சேகர் கோரிக்கை
புதுச்சேரி: மின்துறை நஷ்டத்தை ஈடு செய்யாமல், மக்கள் மீது மின்சார வரி உயர்வை திணிப்பது ஏற்புடையது கிடையாது என, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் மின்சார வாரியம் உயர்த்தி உள்ள மின் கட்டணம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் முன் தேதியிட்டு உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் பல தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டண பாக்கியாக வைத்துள்ளனர். அரசு வழங்கிய மின்சாரத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தாமல் இந்த நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனர். இதை முறையாக வசூல் செய்தாலே, மின்துறைக்கு ஏற்படும் இழப்பீட்டை சரி செய்து குறைந்த விலையில் பொது மக்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். தமிழகத்தில் உயர்த்திய போது, அமைதியாக இருந்த 'இண்டியா' கூட்டணி கட்சியினர் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து போராட்டம் நடந்துவது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர், உரிய நடவடிக்கை எடுத்து, மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.