உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறு நாள் வேலையின்போது உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு மறியல்

நுாறு நாள் வேலையின்போது உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு மறியல்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே நுாறு நாள் வேலையின் போது ஆற்றில் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. வில்லியனுார் அருகே உள்ள சேந்தநத்தம்பேட்டை சேர்ந்தவர் முனுசாமி, 72. இவர் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை நுாறு நாள் வேலை செய்தார். அவர், எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அருகே இருந்தவர்கள் மீட்டு வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.நேற்று காலை 10:30 மணியளவில் சப் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கொண்டாரு தலைமையில் மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சித்தரெட்டி, வில்லியனுார் வட்டார வளர்ச்சி இணை அதிகாரி கலைமதி, பொறியாளர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர். இதனிடையே பொறையூர்-அகரம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஐந்து கிராம மக்கள் ஒன்று திரண்டு நுாறு நாள் வேலையின் போது உயிரிழந்த கூலித் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி வில்லியனுார் - பத்துக்கண்ணு சாலை உளவாய்க்கால் நான்குரோடு சந்திப்பு பகுதியில் பகல் 11:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனுார் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ