| ADDED : ஜூன் 14, 2024 05:46 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் விஷ வாயு தாக்கியதில் மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சமுதாய நலக்கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், புது நகரில் கடந்த 11ம் தேதி காலை கழிவுநீர் இணைப்பில், ஏற்பட்ட விஷ வாயு கசிவால் சிறுமி உட்பட 3 பெண்கள் இறந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுதொடர்பாக பொதுப்பணி, சுகாதாரம், சுற்றுச்சூழல், தடயவியல், தீயணைப்பு, போலீஸ், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த குழுவினர் ஆய்வு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், புதுநகர், 3வது தெருவை சேர்ந்த புஷ்பராணி,38; உள்ளிட்ட 6 பேர் நேற்று மயக்கமடைந்து, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் விஷ வாயு கசிந்ததால் மயக்கம் அடைந்தனரா அல்லது வேறு காரணமா என்பது பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும்.இதனிடையில், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில், புதுநகரில் உள்ள வீடுகளில், கழிவுநீர் குழாய்கள் சரி செய்யும் பணி நேற்று நடக்கவில்லை. அதில் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்களிடம், மாலைக்குள் அனைத்து வீடுகளிலும் உள்ள, கழிவுநீர் குழாய்கள் சரி செய்யப்படும் என்று சிவசங்கர் எம்.எல்.ஏ., மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவங்கியது.இந்நிலையில் விஷவாயு தாக்கும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியேறி சமுதாய நலக் கூடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.