| ADDED : ஜூன் 10, 2024 01:34 AM
புதுச்சேரி : பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா மற்றும் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டங்களை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்து, கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இது, என்.ஆர்.காங்.,-பா.ஜ., கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நுாறு சதவீதம் வெற்றி பெறுவோம் என்ற மனநிலையில் இருந்த முதல்வர் ரங்கசாமி, தேர்தல் முடிவு தலைகீழாக மாறியதால் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் கடந்த 4 நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், மூன்றாம் முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்பு விழா நேற்று டில்லியில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்க அனைத்து மாநிலத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பிரதமர் பதவியேற்று விழாவில் பங்கேற்க டில்லி செல்லாமல் புறக்கணித்தார். நேற்று முன்தினம் டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்பதை தவிர்த்தார். ஆனால், புதுச்சேரி பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டில்லி சென்றுள்ளனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழா மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தது, கூட்டணிக்குள் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
முறைப்படி அழைப்பு இல்லை
முதல்வர் அலுவலகத்தில் விசாரித்தபோது, பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்பு விழாவுக்கு, முறைப்படி அழைப்பு வராததால், விழாவில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி செல்லவில்லை என்றனர்.