| ADDED : மே 07, 2024 04:24 AM
புதுச்சேரி, : ஓய்வு பெற்ற பி.ஆர்.டி.சி. தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க துறை செயலரிடம் எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி மனு அளித்தார்.புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் சிவா, பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பி.ஆர்.டி.சி. தொ.மு.ச. சங்க செயலாளர் ராஜேந்திரன், தலைவர் திருக்குமரன் உள்ளிட்டோர் போக்குவரத்து துறை செயலர் முத்தம்மாவை சந்தித்து அளித்த மனுவில்; புதுச்சேரி பி.ஆர்.டி.சி.யில் கடந்த 2021ம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் வரை ஓய்வு பெற்ற 62 தொழிலாளர்களுக்கு சேமநல நிதி, விடுப்பு தொகை, எம்.ஏ.சி.பி., டி.ஏ., உள்ளிட்ட நிலுவை தொகைகள் வழங்கப்படவில்லை. சேமிப்பு நிதி காலத்தோடு கிடைக்காததால், அத்தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். அதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி ஆணையம் மூலம் மாதம் ரூ. 1800 முதல் ரூ.3000 மட்டுமே வழங்கப்படுகிறது. நிலுவை தொகை கிடைக்காததால் சரிவர குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். துறை அதிகாரிகள் சரிவர செய்யாததே இதற்கு காரணம். நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.