| ADDED : ஜூலை 06, 2024 04:31 AM
புதுச்சேரி: புதுச்சேரி - அரும்பார்த்த புரம் பைபாஸ் சாலை பணியில், வெட் மிக்ஸ் கொட்டி நிரப்பும் பணி நடந்து வருகிறது.புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை யில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா சிக்னல் வரை சாலையை அகலப் படுத்த முடியாததால், வாகன நெரிசலை சமாளிக்க அரும்பார்த்த புரம் ரயில்வே பாலம் துவங்கி, நுாறடிச் சாலை மேம்பாலம் வரையிலான 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை (பைபாஸ்) அமைக்க கடந்த 15 ஆண்டிற்கு முன்பு நிலம் கையப்படுத்தப்பட்டது.28 மீட்டர் அகலத்திற்கு செம்மண் கொட்டி, அதில் 22 மீட்டர் அகலத்திற்கு தார் சாலை, 7 இடங்களில் சிறிய வாய்க்கால் பாலம் அமைக்கப்பட்டது. ரூ.30 கோடி மதிப்பில் நடக்கும் பைபாஸ் சாலையில் செம்மண் கருங்கல் ஜல்லி கொட்டி சமன்படுத்தினர். தொடர்ந்து, தற்போது வெட்மிக்ஸ் நிரப்பும் பணி நடந்து வருகிறது. அடுத்த வாரம் தார் சாலை அமைக்கும் பணி துவங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.