யானையில் வந்த டில்லி பாதுஷா கொடி விழாகோலம் பூண்டு வரவேற்ற புதுச்சேரி
சோழ மண்டல கரையில் ஓர் அழகிய முக்கிய துறைமுகப்பட்டணமாக புதுச்சேரி திகழ்ந்தது. ஆற்காட்டு நவாபின் ஆதரவோடு பிரெஞ்சியர்கள் புதுச்சேரியில் ஆட்சி செய்து தங்களது வாணிபத்தை விரிவாக்கி கொண்டு இருந்தனர். பிரெஞ்சியர்களின் கப்பல்கள் புதுச்சேரிக்கு கப்பல்கள் அடிக்கடி வந்து சென்றுக்கொண்டு இருந்தது.புதுச்சேரியில் பிரெஞ்சியர்கள் வணிகம் செய்வதை பற்றி அறிந்த டில்லி பாதுஷா கடந்த 1742ம் ஆண்டு தனது கொடியை அனுப்பி வைத்தார். பாதுஷாவின் இந்த கொடி ஒரு யானையின் மேல் வந்து கொண்டு இருந்தது. இந்த தகவல் பிரெஞ்சியர்கள் காதுக்கு எட்டியதும் கூடி ஆலோசித்தனர். இந்திய சக்கரவர்த்திக்கு அளிக்கப்பட வேண்டிய மாபெரும் வரவேற்பை டில்லி பாதுஷாவின் கொடுக்க டூப்ளே முடிவு செய்தார்.அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது. பாதுஷாவின் கொடி யானையின் மீது அசைந்து ஆடியபடியே புதுச்சேரிக்குள் மெல்ல நுழைந்தபோது, புதுச்சேரியே விழாகோலம் பூண்டிருந்தது. பிரெஞ்சியர்கள், தமிழ் பிரமுகர்கள் பல்லக்கில் சென்று டில்லி பாதுஷாவின் கொடியை உற்சாகமாக வரவேற்றனர்.கவர்னரும் கொடியேந்திய யானையோடு ஊர்வலமாக வந்தார். கடைசியில் டில்லி சக்கரவர்த்தியின் சின்னமாகிய கொடியை கோட்டையின் மேற்குவாசலில் மேல் வைத்து தினமும் வாத்தியம் இசைக்கப்பட்டது. பாதுஷாவின் கொடிக்கு பல நாட்களுக்கு தொடர்ந்து இசை மரியாதை செலுத்தி விண்ணை அதிர வைத்துள்ளனர். இந்த மேளதாள வரவேற்பு முகலாய அரசு ஊழியர்களுக்கும், பிரமுகர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.ஆற்காடு நவாபின் ஆதரவோடு புதுச்சேரியில் பிரெஞ்சியர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், ஆற்காடு நாபு, அவரின் பிரதிநிதிகள், அவரின் குடும்பத்தினர், அவர் கப்பங்கட்டும் நிவாசமின் பிரநிதிகள் என எவ்வளவு பேர் புதுச்சேரி வந்து சென்றுள்ளனர்.அவர்களை வரவேற்று தகுந்த முறையில் உபசரித்து சன்மானங்கள் அளித்து அனுப்பி வைப்பதை பிரெஞ்சியர்கள் தங்களது கடமையாக கொண்டிருந்தனர். ஆனால் நவாபு சப்தர் அலிகானுக்கும், நவாபு தோஸ்து அலிகானுக்கும், நிசாமின் பரிசு பொருட்களுக்கும் கொடுத்த வரவேற்பினை காட்டிலும் சற்று பிரமாண்டமாவே பாதுஷாவின் கொடிக்கு கொடுக்கப்பட்டது. டில்லியில் கோலோச்சிய பாதுஷா புதுச்சேரியின் மீது தனக்கு உள்ள உரிமை நிலை நாட்டவே அவர் பிரெஞ்சியர்களுக்கு கொடியை அனுப்பி இருக்கலாம் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பிரமாண்ட வரவேற்பு ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.