| ADDED : ஏப் 05, 2024 05:25 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் வாரிசுகள் களம் இறங்கி உள்ளதால் களை கட்டி உள்ளது.புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தெருமுனை பிரசாரத்துடன், அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர்.மேலும், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் களத்தில் குதித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இளைய தலைமுறையினரின் வேகமான, புதுமையான ஓட்டு சேகரிப்பு முறைகளால் பிரசாரம் களை கட்டி உள்ளது.சபாநாயகர் செல்வத்தின் மகள் டாக்டர் ஜனனி, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து கடந்த சில நாட்களாக ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். மணவெளி தொகுதி தவளக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார்.ஏற்கனவே, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகனின் மகன் டாக்டர் பிரபாகரன் 'அம்மா அறக்கட்டளை' துவக்கி பல்வேறு சமுதாய பணிகளை செய்து வருகிறார். தற்போது, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து உப்பளம் தொகுதியில் ஓட்டு சேகரித்து வருகிறார்.தாவூது பேட்டை, எல்லம்மன் கோவில் தோப்பு, இந்திரா நினைவு நகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.இதுபோல, நேரு எம்.எல்.ஏ.,வும் தனது வாரிசாக மகனை அரசியலில் களம் இறக்க திட்டமிட்டுள்ளார்.