அமெரிக்காவில் தற்கொலை செய்த வாலிபர் உடல் புதுச்சேரியில் அடக்கம்
புதுச்சேரி: அமெரிக்காவில் மனைவியை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த வாலிபரின் உடல் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 39. இவர் அமெரிக்காவில் சிறை வார்டனாக பணி செய்து வந்தார். இவரது மனைவி கடலுார், முதுநகர் பகுதியை சேர்ந்த சவுமியா, 31; இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுக்கு முன், திருமணம் நடந்து, 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே கடந்த 21ம் தேதி குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த, பாலசுப்ரமணியன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரது மனைவியை சுட்டு கொலை செய்தார். பின், அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன், மனைவி இறந்த நிலையில், 3 பிள்ளைகளுக்கும் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் ஆதரவு கொடுத்து தங்க வைத்தனர்.பாலசுப்ரமணியனின் உடலை புதுச்சேரிக்கு கொண்டு வர அவரது தாய், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கலெக்டர் ஆகியோருக்கு மனு அளித்தார். அதனை தொடர்ந்து, இந்திய துாதரக அதிகாரிகள், பாலசுப்ரமணியன் உடலை புதுச்சேரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.இந்திய துாதரகம் மூலம், பாலசுப்ரமணியன் உடல் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது உறனர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.