| ADDED : ஆக 20, 2024 04:57 AM
புதுச்சேரி: தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி அரசின் மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரி, 35வது இடத்தை பிடித்து சாதித்துள்ளது.இது குறித்து கல்லுாரி டீன் கென்னடி பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையால் நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை தரவரிசைபடுத்த ஏற்படுத்தப்பட்டுள்ளது.இது கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி, பட்டபடிப்பு முடிவுகள், வேலைவாய்ப்பு, சமூகத்தில் கல்லுாரியை பற்றிய மக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில், அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.2024ம் ஆண்டிற்கான பல் மருத்துவ கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் முதல் முறையாக இப்பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்து, அகில இந்திய அளவில் விண்ணப்பித்த 184 கல்லுாரிகளில் 35வது இடத்தை பிடித்து சாதித்துள்ளது. இது புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.