ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
புதுச்சேரி,: புதுச்சேரியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிகாலை நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில், குற்ற சம்பவங்களை குறைப்பதற்கும், ரவுடிகளை ஒழிப்பதற்கும் போலீசார் ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா என அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சட்ட ஒழுங்கு சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில், கிழக்கு பகுதி எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நகரப்பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் அதிரடி சோதனை செய்தனர். இதில் பெரியக்கடை, முத்தியால்பேட்டை, சோலை நகர், ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, காலாப்பட்டு, பெரியார் நகர், ஆட்டுப்பட்டி, வாணரப்பேட்டை, கோவிந்தசாலை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளின் சோதனை நடத்தினர். அதே போல, எஸ்.பி., வம்சீதாரெட்டி மேற்பார்வையில், மேற்கு பகுதியில் உள்ள ரவுகளில் வீடுகளிலும்,வடக்கு பகுதியில் எஸ்.பி., வீரவல்லவன் மேற்பார்வையில் சோதனை செய்தனர். . மேலும், சந்தேகமாக இருந்த ரவுடிகள் சிலரை போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் அதிகாலை நேர அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று அதிகாலை நடத்திய அதிரடி சோதவையில் 160க்கும் மேற்பட்ட குற்ற பின்னணி உடைய ரவுடிகளின் வீடுகளின் சோதனை செய்யப்பட்டது.அதில், 39 நபர்களை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். 2 பேர் மீது ஆயுதம் வைத்திருந்ததற்காக வழக்கு பதிவு செய்தனர். 25 நபர்கள் மீது தடுப்பு நடவடிக்கை கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், 9 பிடியாணை நிறைவேற்றப்பட்டது. மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை ஒருவரை கைது செய்தனர்.