வேலையில்லா பட்டதாரிகள் சங்க பேரணி, ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலையில்லா பட்டதாரிகள் பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி சென்றனர். சங்கத்தின் நிர்வாகிகள், பார்த்தசாரதி, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, மறைமலை அடிகள் சாலையில் இருந்து துவங்கி அண்ணா சாலை, மிஷன் வீதி வழியாக சென்று சட்டசபை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அரசிதழில் பதிவு பெறாத பி மற்றும் சி பணியிடங்களுக்கு வயது தளர்வை நீட்டிக்க வேண்டும். மேலும், புதுச்சேரியில் பணியாளர் தேர்வாணையம் இல்லாத காரணத்தினால், நேரடி நியமன போட்டித் தேர்வுக்கு சரியான கால இடைவெளியை அறிவிக்க வேண்டும்,அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தினர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.