| ADDED : ஜூலை 07, 2024 03:46 AM
புதுச்சேரியில் பெரும்பாலான அரசு சார்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் வழங்க முடியாமல் பெரும்பாலான நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.இதே நிலையில், தான் தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் நிறுவனமும் இயங்கியது. இதன் மேலாண் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள அய்யப்பன், கான்பெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 9 மதுபானக் கடைகள், 4 பெட்ரோல் பங்குகளின் வருவாயை உயர்த்தி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கினார்.மேலும், 34 கோடி அளவில் இருந்த கடனிற்கான தவணை தொகையையும் திரும்ப செலுத்த தொடங்கினார். பல ஆண்டுகளுக்கு முன்பே, கான்பெட் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி வாங்க ரூ.40 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால், அந்த பணத்தை லாரி வாங்காமல் மற்ற பணிகளுக்கு செலவிட்டு விட்டனர்.இந்நிலையில், பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல், டீசல் ஏற்றி வர புதிய டேங்கர் லாரி வாங்குவதற்காக வங்கிகளை மேலாண் இயக்குநர் அணுகினார். சிபில் ஸ்கோர் இல்லை, பல கோடி ரூபாய் கடன் தொகை நிலுவை உள்ளிட்டவைகளை காரணங்களை கூறி அனைத்து வங்கிகளும் கைவிரித்து விட்டன.மனம் தளராத மேலாண் இயக்குனர், முத்திரையர்பாளையம் கூட்டுறவு வங்கி மூலமாக 46 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய டேங்கர் லாரியை வாங்கி அசத்தியுள்ளார். 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டேங்கர் லாரி காரைக்காலில் உள்ள 3 பங்குகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட உள்ளது.மேலும், கரிக்கலாம்பாக்கத்தில் புதிய பெட்ரோல் பங்க் திறக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.