விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா?
புதுச்சேரி: சர்வதேச, தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்களுக்கு காலத்தோடு நிதி ஒதுக்கி கவுரவப்படுத்த வேண்டும். புதுச்சேரி கல்வியில் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. ஆனால் விளையாட்டு என்று வரும்போது மாநிலம் பின்தங்கியே உள்ளது. பல மாநிலங்களில், விளையாட்டுக்கு என்று தனித் துறை செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்துகின்றன.புதுச்சேரியில் விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் முக்கியத்துவம் இல்லாமலேயே போகிறது. அவர்கள் தேசிய போட்டிக்கு செல்லும்போது குறைந்தபட்சம் பயண செலவை கூட ஏற்பதில்லை. இதனால், செலவுக்காக, எம்.எல். ஏ.,க்கள் கட்சி பிரமுகர்களிடம் ஒவ்வொரு போட்டிக்கும் விளையாட்டு வீரர்கள் கைகேந்தி வருகின்றனர்.இது ஒரு பக்கம் இருக்க சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்களுக்கும் பரிசு தொகை கூட இன்னும் வழங்காமல் உள்ளது. 2010ம் ஆண்டு முதல் இதுவரை 11 கோடி ரூபாய் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தரப்பட வேண்டும். ஆனால் 1.40 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்திலும் விளையாட்டு துறைக்கும் உதவவில்லை. காலத்தோடு விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகை அளித்து ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம், அப்போது தான் அவர்கள் அடுத்தடுத்த சாதனைகளை புரிந்து, மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பர். அத்துடன் பள்ளி மாணவர்களும் ஊக்கம் பெற்று விளையாட்டு வீரர்களாக உருவெடுப்பர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சாதித்த விளையாட்டு வீரர்களை பரிசு தொகை வழங்கி ஊக்குவிப்பதில் அலட்சிய போக்கு நிலவுகிறது.இது விளையாட்டு வளர்ச்சியிலும் சறுக்கலை ஏற்படுத்தி வருகிறது. இளம் வயதில் சாதித்த விளையாட்டு வீரர்களை, அவர்கள் வயதான பிறகு பரிசு தொகை அளிப்பதில் எந்த பயனும் இருக்காது என்பதை அரசு உணர வேண்டும். எனவே, உடனடியாக விளையாட்டு துறைக்கு 11 கோடி நிதி ஒதுக்க, நிதித் துறைக்கு, கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும்.