3 பேர் கொலை வழக்கில் 10 பேர் சிறையில் அடைப்பு
புதுச்சேரி; புதுச்சேரியில் மூன்று வாலிபர்களை வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சத்யா உள்ளிட்ட 9 பேரை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, ரெயின்போ நகரில் உழவர்கரை வின்சென்ட் வீதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தெஸ்தான் மகன் ரஷி, 20; மற்றும் அவரது நண்பர் உருளையன்பேட்டை திடீர் நகர் ஸ்ரீதர் மகன் தேவா (எ) தேவக்குமார், 21; மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் மெயின்ரோட்டைச் சேர்ந்த ஆதி (எ) ஆதித்யா, 20; ஆகியோர் கடந்த 14ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பிரபல ரவுடியான சத்யா 27, சஞ்சிவி 22, சரண் 20, சக்திவேல் 21, விஷ்ணு 20, சாரதி 24, வெங்கடேசன் 25, ரவிந்திரகுமார் 20, காமேஷ் 28 மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது;சத்யாவிற்கும், முதலியார்பேட்டையை சேர்ந்த ரவுடி விக்கி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சத்யாவின் கூட்டாளியான முகிலனை பண்ருட்டியில் விக்கி தரப்பினர் கொலை செய்தனர். மேலும், சத்யாவையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதற்கிடையே சத்யாவுடன் இருந்த ரஷி, விக்கியுடன் போய் சேர்ந்துள்ளார்.பின்னர், சத்யா செல்லும் இடங்களில் ரஷியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனால், ரஷி மீது சத்யாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது, ரஷியிடம் என்னை இனி பின்தொடர வேண்டாம் என சத்யா எச்சரித்துள்ளார். இருப்பினும் ரஷி பின்தொடர்வதை நிறுத்தவில்லை.இந்நிலையில் கடந்த 13ம் தேதி கடற்கரைக்கு சென்றிருந்த சத்யாவை ரஷி, கூட்டாளிகளுடன் பின்தொடர்ந்ததால், இவனை விடக்கூடாது என, நினைத்து ரஷி மற்றும் அவரது கூட்டாளிகளை மிரட்டி ரெயின்போ நகர் அழைத்து சென்றனர்.அங்கு, அவர்களை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தவர்களை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 9 பேரை காலாப்பட்டு மத்திய சிறையிலும், சிறுவனை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிலும் அடைத்தனர். வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தற்செயலாக நடத்ததாம்
3 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியையே உலுக்கியது. ரவுடிகளின் இச்சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், எதற்காக கொலை நடந்து என கேட்டபோது, கடற்கரை சாலை அருகே தற்செயலாக நண்பர்கள் சந்தித்து கொண்டபோது, பேசுவதற்காக ரெயின்போ நகர் அழைத்து சென்றதாகவும், அங்கு தகராறு ஏற்பட்டதால், அவர்களை வெளியே விட்டால் பிரச்னை ஏற்படும் என வெட்டி கொலை செய்ததாகவும், இந்த கொலை சம்பவமே தற்செயலாக நடத்ததாக போலீசார் கூறினர். ரகசியம் காத்த போலீசார்
சினிமா திரைப்படத்தில் வருவது போல், ரவுடிகளுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒரே இடத்தில் 3 பேர் வெட்டி கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் நேற்று கைது செய்து, சிறைக்கு கொண்டு சென்றனர். வழக்கமா அண்டா, கோழி, கூரையை பிரித்து குதித்தவன் ஆகியோரை கைது செய்தால், செய்தியாளர்களை அழைத்து புகைப்படத்திற்கு போலீசார் போஸ் கொடுப்பர்.ஆனால், 3 பேர்களை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்த தகவலை வெளியே யாருக்கும் தெரிவிக்காமல், ரகசியமாக குற்றவாளிகளை விருந்தாளிகள் போன்று அமர வைத்து, போட்டோ எடுத்து, அதனை வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்துவிட்டு, கொலைக்கான காரணம், எப்படி கைது செய்தீர்கள் என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லாமலும், உண்மை காரணம் வெளியே வந்து விடுமோ என்ற அச்சத்திலும் செய்தியாளர்கள் யாரையும் சந்திக்கமால், நேராக கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.