உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு கட்டடங்களில் 3 கட்டமாக செயல்படுத்த முடிவு

புதுச்சேரி அரசு கட்டடங்களில் 3 கட்டமாக செயல்படுத்த முடிவு

புதுச்சேரி: அரசு கட்டடங்கள் அனைத்திலும் மெகா சூரிய மின்சார திட்டத்தை செயல்படுத்தி,14 மெகாவாட் மின்சாரத்தை பெற புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி அரசில் மொத்தம் 54 அரசு துறைகள் உள்ளன. இக்கட்டடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சூரிய மின்சார ஒளி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிகாரிகளின் உச்ச அதிகார மையமாக உள்ள தலைமை செயலக கட்டடத்திலும் கூட சூரிய மின்சார திட்டத்திற்கான பேனல்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்போது அனைத்து அரசு கட்டடங்களிலும் மெகா சூரிய ஒளி மின்சார திட்டத்தினை செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை வாயிலாக முடுக்கிவிட்டுள்ளது. இந்த சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய புதுச்சேரி அரசின் மின் துறையும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துள்ளது. இந்த நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சுத்தமான ஆற்றலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. புதுச்சேரி அரசு கட்டடங்களில் மொத்தம் மூன்று கட்டங்களாக சூரிய மின்சார திட்டத்திற்கான பேனல்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான டெண்டர் பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளன. நிறுவனம் இறுதியானதும் பணிகளையும் வேகமாக செயல்படுத்த புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி அரசினை பொருத்தவரை தினசரி 540 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 390 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் புதுச்சேரிக்கு வரும் இந்த சூரிய மின்சாரம் மற்ற மாநிலங்களில் இருந்து உற்பத்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பொருத்து தினமும் மாறுபாடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் புதுச்சேரியில் இருந்து 12 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் பக்கபலமாக உள்ளது. இந்த சூரிய ஒளி மின்சாரத்தை தொழிற்சாலைகள், வீடுகளில் இருந்து மின் துறை பெறுகிறது. அரசு கட்டடங்களில் சூரிய ஒளி மின்சார திட்டத்திற்கு பேனல்கள் பொருத்துவது மூலம் 14 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 26 மெகாவாட்டாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகாவாட் என்றால் என்ன?

மின் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மெகாவாட் என்பது ஒரு மில்லியன் வாட்களுக்கு சமமான மின்சக்தி அலகு ஆகும். இது பெரிய மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் சூரிய மின்சக்தி பண்ணைகள் போன்ற பெரிய அளவிலான மின் உற்பத்தி சாதனங்களின் ஆற்றல் வெளியீட்டைக் கணக்கிடப் பயன்படுகிறது. இது மின்சாரத்தின் சக்தி அல்லது அது எவ்வளவு வேகமாக உற்பத்தி செய்யப்படுகிறது அல்லது பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ