உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு: துணை ஜனாதிபதியிடம் முதல்வர் வலியுறுத்தல்

புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு: துணை ஜனாதிபதியிடம் முதல்வர் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடம் முதல்வர் ரங்கசாமி மனு அளித்து வலியுறுத்தினார். புதுச்சேரி மாநிலத்திற்கு அரசு பயணமாக வந்துள்ள துணை ஜனாதிபதியை முதல்வர் ரங்கசாமி ஓட்டல் அக்கார்டில் சந்தித்து பேசினார். இருவரும் புதுச்சேரி மாநில வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக விவாதித்தனர். அப்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 25 சதவித இடை ஒதுக்கீடு பிரச்னையை தீர்க்கவேண்டும் என வலியுறுத்தி மனுவும் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உயர்கல்வித் துறையில், குறிப்பாகச் சிறப்புப் பாடப்பிரிவுகளைப் பயில்வதில், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது புதுச்சேரி மாணவர்கள் குறைந்த வாய்ப்புகளையே பெற்றுள்ளனர். இங்கு ஒரு மத்திய பல்கலைக்கழகம் உருவானபோது, புதுச்சேரி மாணவர்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான அந்த இடைவெளி குறையும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். 1990-களில் இக்கோரிக்கை எழுந்தபோது, அப்போதைய துணைவேந்தர் ஞானம் , கல்வி மற்றும் நிர்வாகக் குழுக்களுடன் கலந்தாலோசித்து, 1997-இல் 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார். தொடக்கத்தில் 8 பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, பின்னர் 18 பாடப்பிரிவுகளாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் பல்கலைக்கழகத்தில் அதிக வேலைவாய்ப்புத் திறன் கொண்ட புதிய மற்றும் மதிப்புமிக்க பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டபோது, இந்த இடஒதுக்கீடு அவற்றுக்கு விரிவுபடுத்தப்படவில்லை. இது புதுச்சேரி இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, பல்கலைக்கழகத்தில் 64 பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேராசிரியர் ராமதாஸ் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவும் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் சீரான 25 சதவீத இடஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை 2013--14-இல் கல்வி மற்றும் நிர்வாகக் குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை அது தொடர்பான எந்த முடிவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. பல்கலைக்கழகச் சட்டம்-1985-இன் படி, புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்வதற்காகவே இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதன் அர்த்தம் , அங்கு வழங்கப்படும் அனைத்துக் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளும் புதுச்சேரி மாணவர்களுக்குத் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதாகும். மத்திய கல்வி நிறுவனங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது புதிய விஷயம் அல்ல. காரைக்காலில் உள்ள என்.ஐ.டி., 50 சதவீத இடத்தையும், ஜிப்மர் மருத்துவ நிறுவனம் 1964 முதல் 25 சதவீத இடத்தையும் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கி வருகின்றன. புதுச்சேரி பல்கலைக்கழகமே ஏற்கனவே 18 பாடப்பிரிவுகளில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளது. சில பாடப்பிரிவுகளில் மட்டும் இதனை ஏற்றுக்கொண்டு, மற்றவற்றுக்கு மறுப்பது வியப்பாக உள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகம் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. கல்வி மற்றும் நிர்வாகக் குழுக்களின் ஒப்புதலுடன், தற்போதுள்ள அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டை பல்கலைக்கழகமே தானாக முன்வந்து விரிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் செய்யவில்லை. எனவே, தாங்கள் நீங்கள் தலையிட்டு, தற்போதுள்ள மற்றும் இனிவரும் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். முதல்வரின் இந்த மனுவினை பெற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை