அரசு ஊழியர்கள் 40 சதவீதம் பேர் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
அ.தி.மு.க., குற்றச்சாட்டு புதுச்சேரி: புதுச்சேரியில் 40 சதவீத அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை என, அ.தி.மு.க., குற்றம்சாட்டி உள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி, உள்ளிட்ட பகுதி முஸ்லிம் சமுதாய மக்களுக்காக, 2020ம் ஆண்டு பிப்ரவரியில், காலாப்பட்டில் அரசு புறம்போக்கு இடத்தில் 4500 சதுரடியில் இடுகாடு அமைக்க உழவர்கரை நகராட்சி அனுமதி அளித்தது. ஆனால், இதுவரை அமைக்கவில்லை.தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என காரணம் கூறி அளித்த அனுமதியை உழவர்கரை நகராட்சி ரத்து செய்துள்ளது. இது, அரசின் பொறுப்பற்ற செயல். உடனடியாக உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு இடத்தில் முஸ்லீம் சமுதாய மக்களுக்கு இடுகாடு அமைத்து தர வேண்டும்.புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் பின்பற்ற முடியவில்லை. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை. புதுச்சேரியில் தயாரித்து அனுப்படும் போலி மதுபானங்களை தடுக்க முடியவில்லை. புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெற முடியவில்லை.அனைத்து அரசு அதிகாரிகளும் சொத்து கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கூறியது. ஆனால், புதுச்சேரியில் கடந்த ஆண்டு 60 சதவீத அதிகாரிகள் மட்டுமே சொத்து கணக்கு தாக்கல் செய்தனர். 40 சதவீதம் பேர் தாக்கல் செய்யவில்லை. இத்தகைய அதிகாரிகள் மீது ஏன் தாக்கல் செய்யவில்லை என அரசு கேட்பது கிடையாது. ஆனால் ஹெல்மெட் விஷயத்தில் தீவிரம் கட்டுவதின் மர்மம் தெரியவில்லை என கூறினார்.