45 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: உழவர்கரை நகராட்சி அதிரடி
புதுச்சேரி : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நிலை குறித்த ஆய்வில், 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு;மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தளின் படி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் 'ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்தா பகுதியாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதனடிப்படையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நிலை குறித்து ஆய்வு செய்ய நேற்று முன்தினம் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழு மூலகுளம் முதல் மேட்டுபாளையம் கனரக ஊர்தி முனையம் வரை உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் 45 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அதனை வினியோகம், பயன்படுத்திய கடைகள், வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்து 6,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த ஆய்வு உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.