என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற போலி ஆவணம் சமர்ப்பிப்பு; ஆந்திரா, தமிழகத்தின் 5 ஏஜன்டுகள் கைது
புதுச்சேரி: புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் சேர்வதற்கு, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஆந்திரா மற்றும் தமிழக பகுதியைச் சேர்ந்த 5 ஏஜன்டுகளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லுாரி, 3 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.,) மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் 116 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.இந்த இடங்களில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறவினர்களின் பிள்ளைகள் ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறலாம்.குறைவான 'நீட்' மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், ஏஜன்டுகள் மூலம் போலியான வெளிநாட்டு துாதரகங்களின் கடிதம் பெற்று, என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்க்கை பெற்றனர்.என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை பெற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 73 மாணவர்கள் போலியான துாதரக ஆவணங்கள் சமர்ப்பித்தது தெரிய வந்தது.இந்த மோசடி தொடர்பாக 'சென்டாக்' ஒருங்கிணைப்பாளர் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆந்திரா மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏஜன்டுகள் துாதரக கடிதங்களை போலியாக தயாரித்து கொடுத்து எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற உதவியது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மெட்டி சுப்பாராவ்,50; தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் (எ) ஜேம்ஸ்,48; செல்வகுமார், 43, கார்லோஸ் சாஜிவ்,45; வசந்த் (எ) விநாயகம்,42; ஆகிய 5 ஏஜன்டுகளை கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.இதில் தொடர்புடைய மேலும் பல ஏஜன்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.