விடுதி மாணவர்களுக்கு வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி காரைக்காலில் பரபரப்பு
காரைக்கால் : அரசு விடுதி மாணவர்களுக்கு வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி திரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் உள்ள அரசு மாணவர் விடுதியில் வேளாண் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 50 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.இந்த விடுதி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கிய மதிய உணவில், கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருவருப்படைந்த மாணவர்கள், சாப்பிடாமல் சென்றனர்.உணவில் கரப்பான்பூச்சி மேய்ந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதனை அறிந்த இந்திய தேசிய மாணவர் காங்.,கட்சியின் மாவட்ட செயல் தலைவர் ராகுல்காந்தி, மாணவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் பிரவின் பிர்லா உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, விடுதியில் சுகாதாரம் மற்றம் அடிப்படை வசதிகள் இல்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.இதுகுறித்து ராகுல்காந்தி மற்றும் பிரவின்பிர்லா ஆகியோர், கலெக்டர், துறை இயக்குநர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோரை சந்தித்து நடவடிக்கை வலியுறுத்தினர்.