ஆதரவற்று திரிந்த சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு
பாகூர்: ஆதரவற்று சுற்றித்திரிந்த 8 வயது சிறுவனை, குழந்தைகள் நலக்குழுவினர் போலீஸ் உதவியுடன் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் கிராமத்தில், 8 வயது சிறுவன் தாய், தந்தையின் பராமரிப்பின்றி, ஆதரவற்று இருப்பதாக, குழந்தைகள் நலக்குழுவினர், கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், உத்தரபிரசேத மாநிலத்தை சேர்ந்த தம்பதி கடந்த 10 ஆண்டிற்கு முன்,பிழைப்பு தேடி காட்டுக்குப்பத்தில்,வாடகை வீட்டில்குடியேறி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீஜித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கணவர் சமையல் வேலைக்கு வெளியூர் சென்றபோது,அங்கு வேறு ஒரு பெண்னுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சில நாட்களில், அந்த பெண் குழந்தையையும், கணவரையும் விட்டு விட்டு பிரிந்து சென்றார். இதையடுத்து, குழந்தையின் தந்தை, காட்டுக்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து வளர்த்து வந்தார். அவர் மீண்டும் வெளியூருக்கு சென்று விட்ட நிலையில், அவரது மூத்த மகன் ஸ்ரீஜித், பராமரிப்பில் அந்த குழந்தை இருந்து வந்தது. இந்நிலையில், ஸ்ரீஜித் வெளியூருக்கு வேலைக்கு சென்ற நிலையில், அக்குழந்தையை முதல் மனைவியும் கண்டுகொள்ள வில்லை. இதனால், 8 வயதுள்ள அந்த சிறுவன் யார் ஆதரவுமின்றி அதே கிராமத்தில் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் உதவியுடன் குழந்தைகள் நலக்குழுவினர், அந்த சிறுவனின் தந்தையை வரவழைத்து, விசாரணை நடத்தி, அவரிடம் ஒப்புதல் பெற்று, சிறுவனை மீட்டு, பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகள் நலக்குழுவின் நடவடிக்கையில், ஆதரவற்ற சிறுவனுக்கு, மறுவாழ்வு கிடைத்துள்ளது.