| ADDED : ஜன 22, 2024 12:54 AM
புதுச்சேரி : கோரிமேட்டில் பட்டா கத்தியுடன் வலம் வந்த 'டியோ குரூப் வாலிபர்' மொட்ட விஜயை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி கோரிமேடு பகுதியில் 17 வயதுடைய சிறார்கள் 8 பேர் கொண்ட 'டியோ குரூப்' உள்ளது. இந்த குழுவில் உள்ளவர் டியோ ஸ்கூட்டரில் சுற்றுவதால், இக்குழுவுக்கு அப்பெயரை போலீசார் வைத்துள்ளனர். இந்த குழுவில் உள்ள சிறார்கள் பெட்ரோல் குண்டு தயாரித்து வீசுவதிலும் கை தேர்ந்தவர்கள்.திருட்டு, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல வழக்கு களில் சிக்கி வந்தனர். இவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றம் கொண்டு சென்றாலும், சிறார் என்பதால் எளிதாக ஜாமினில் வெளியே வந்து மீண்டும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், இந்த குழுவில் உள்ள 3 பேர் 18 வயதை கடந்த பின்னர், அடிதடி வழக்கில் சிக்கியதால் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டியோ குரூப்பைச் சேர்ந்தவர் திலாஸ்பேட்டை, வீமன் நகர் கோபி மகன் விஜய் (எ) மொட்டை விஜய், 18. இவர் மீது 4 வழக்குகள் உள்ளன.நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை மொட்டை விஜய் பட்டா கத்தியுடன் கொண்டாடுவதாக தகவல் பரவியது. தகவல் அறிந்த போலீசார் கோரிமேடு கனரக வாகன முனையம் அருகே சென்றபோது, கத்தியுடன் தனியாக நின்றிருந்த மொட்டை விஜயை சுற்றி வளைத்து பிடித்தனர். கத்தியை பறிமுதல் செய்த போலீசார், மொட்டை விஜயை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.