டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டெங்கு தடுப்புப் பணிகளை, தீவிரப்படுத்துவது தொடர்பாக, விரைவு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மருத்துவ அதிகாரி டாக்டர் சரண்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் முனிசாமி, சானிட்டரி இன்ஸ்பெக்டர்கள் அமுதவல்லி, ஜீவா, மேஸ்திரிகள் இருசப்பன் மற்றும் நாகவல்லி, சுகாதார உதவியாளர்கள் ஜவகர், கோபி, வேல்முருகன், சாமி, சரவணன், ராஜு, ராஜவேலு, ஜெயஸ்ரீ ஆகியோர பங்கேற்றனர். கூட்டத்தில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், களப்பணிகளை தீவிரப்படுத்துவது, கொசுப் புழு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கான, தொடர் கண்காணிப்பை வலுப்படுத்துவது, குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி காலி மனைகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்படும் இடங்கள், மழைநீர் தேங்கக்கூடிய இதர இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கள ஆய்வின்போது, ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீர்த்தேக்க இடங்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்றுதல், சுகாதார அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்தி, தொடர்ந்து கொசுப்புழு உற்பத்திக்கு வழி வகுக்கும் வகையில் செயல்படுவோர் மீது நகராட்சி விதிமுறைகளின் படி அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.