உப்பனாறு பாலம் பணியில் விஞ்ஞான ஊழல் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி: உப்பனாறு வாய்க்கால் பாலம் கட்டும் பணியில் விஞ்ஞான ஊழல் நடந்துள்ளதாக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.அ.தி.மு.க., சார்பில் உப்பனாறு வாய்க்கால் பாலம் கட்டுமான பணி ஊழலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர், பேசியதாவது:நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் மீது மேம்பாலம் கட்ட 2006ல் ரூ. 27 கோடி செலவில் அடிக்கல் நாட்டப்பட்டது.பாலம் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இதையடுத்து, ஒவ்வொரு ஆட்சியின் போதும் மேம்பாலம் கட்டுவதற்கு புதிய டெண்டர் விடுவதும், கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்படுவதும், டெண்டர் எடுத்தவர்கள் அரசிடம் அவ்வப்போது ஆர்பிட்ரேஷனுக்கு சென்று பல மடங்கு இழப்பீட்டு தொகை பெறுவதுமாக இருந்தனர்.இறுதியாக ரூ.29.25 கோடி அளவிற்கு மீண்டும் மேம்பாலத்தை முடிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ரூ.27 கோடி செலவில் துவங்கிய பாலம் பணி ரூ.95 கோடி அளவிற்கு சென்றுள்ளது. இதில் ரூ.68 கோடி அளவிற்கு டெண்டர் எடுத்தவர்களுக்கு இழப்பீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞான ரீதியான ஊழல்.இந்த ஊழலில் பிரதான பங்கு 2017ம் ஆண்டு காங்.,தி.மு.க., கூட்டணி ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசையே சாரும்.மேம்பாலம் கட்டுமான பணியில் நடந்த ஊழலின் மீது கவர்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர், பேசினார்.